‘கஜா’ புயல் எதிரொலி: 32 மாவட்டங்களில் 6,812 நிவாரண முகாம்கள் தயார்நிலை


‘கஜா’ புயல் எதிரொலி: 32 மாவட்டங்களில் 6,812 நிவாரண முகாம்கள் தயார்நிலை
x
தினத்தந்தி 13 Nov 2018 11:30 PM GMT (Updated: 13 Nov 2018 11:30 PM GMT)

‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 6 ஆயிரத்து 812 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 15-ந் தேதி (நாளை) கனமழை பெய்யும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் முடிவு எடுத்துக்கொள்ளப்படலாம்.

களத்தில் உள்ள அடிப்படை பணியாளர்கள் விடுமுறை எடுக்காமல் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் தொடர்பாக ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் வழங்கப்படும்.

புயலின் போது வாகனங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பழைய கட்டிடங்களின் உறுதி தன்மையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

‘கஜா’ புயல் 3 முறை திசை மாறி இருக்கிறது. அதன் திசையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

கடலோர மாவட்டங்கள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. அதேபோல், கடலூர்-பாம்பனுக்கு இடைப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

இதுவரையில் கடலோர மாவட்டங்களில் 2,559 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. 410 பல்துறை அலுவலர்களை கொண்ட மண்டல குழுக்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்நிலை மீட்பாளர்கள் 7 ஆயிரத்து 158 பெண்கள் உள்பட 22 ஆயிரத்து 495 பேர் தயார்நிலையில் உள்ளனர்.

சென்னை, கடலூர், ராமநாதபுரத்துக்கு தலா ஒன்றும், சிதம்பரத்துக்கு இரண்டும், நாகப்பட்டினத்துக்கு மூன்றும் என மொத்தம் 8 தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும்(ஒவ்வொரு குழுவுக்கு தலா 25 பேர் வீதம்), சென்னை, கடலூருக்கு தலா ஒன்றும், நாகப்பட்டினத்துக்கு இரண்டும் என 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் பணியாளர்களும் தயார்நிலையில் இருக்கின்றனர். மருத்துவமனைகளின் கீழ்தளத்தில் உள்ள ஜெனரேட்டர்களை உயர்மட்ட அளவில் பொருத்திடவும், போதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பில் வைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி 1,618 பொக்லைன் எந்திரங்கள், 1,454 மரம் அறுக்கும் எந்திரங்கள், 1,032 படகுகள், 1,441 ஜெனரேட்டர்கள், 1,463 தண்ணீர் இறைக்கும் பம்பு செட்டுகள், 7 எச்.ஏ.எம். ரேடியோக்கள், 1,125 நீச்சல் வீரர்கள், 657 பாம்பு பிடிக்கும் வீரர்கள், 236 மருத்துவக்குழுக்கள், 368 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 315 கால்நடை மருத்துவக்குழுக்கள் தயார்நிலையில் வைத்து இருக்கிறோம். நீர்நிலைகளையும், நீர் வழிச்சாலைகளையும் முறையாக கண்காணித்து வருகிறோம்.

140 மீனவ படகுகள் இன்னும் கரைதிரும்பவில்லை. நெல்லூர் கடலோர பகுதிகளில் மீன்பிடித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. சூழ்நிலைகளை பார்த்து பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிடுகிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

புயல் வந்து பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதனால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக 32 வருவாய் மாவட்டங்களில் 6 ஆயிரத்து 812 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருக்கிறது. அங்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்படும். கடலோர மாவட்டங்களில் நிரந்தர நிவாரண முகாம்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story