‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதா? என கண்டறிய ஜெயலலிதாவுக்கு சிறப்பு பரிசோதனை செய்யவில்லை : அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்


‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதா? என கண்டறிய ஜெயலலிதாவுக்கு சிறப்பு பரிசோதனை செய்யவில்லை : அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:53 PM GMT (Updated: 14 Nov 2018 11:53 PM GMT)

‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதா? என்பதை கண்டறிய ஜெயலலிதாவுக்கு சிறப்பு பரிசோதனை செய்யவில்லை என்று அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் வாக்கு மூலம் அளித்தார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் தங்கராஜ் பால்ரமேஷ், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் செந்தில்குமார், ரேமன்ட் டோமினிக் சேவியோ, தொழில்நுட்ப வல்லுனர் மதிவாணன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஐ.ஜி. சத்தியமூர்த்தி உத்தரவின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம், ஆணையத்தில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் ஆணையம் தரப்பு வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு சத்தியமூர்த்தி, ‘கண்காணிப்பு கேமராவை அகற்றும்படி நான் கூறவில்லை’ என்றார். அப்படியென்றால் அப்பல்லோ நிர்வாகம் அதுபோன்று கூறியதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், இது பணி ரீதியான குற்றச்சாட்டு என்பதால் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே அப்பல்லோ தரப்பு வக்கீல்(ஐ.ஜி. சத்தியமூர்த்தியை பார்த்து), ‘அன்றைய தேதியில் நீங்கள் தான் கண்காணிப்பு கேமராவை செயல்படாமல் நிறுத்தி வைக்கும்படி கூறினீர்கள். தற்போது மாற்றி சொல்கிறீர்கள்’ என்றார். அதற்கு சத்தியமூர்த்தி மறுப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மருத்துவர் செந்தில்குமாரிடம், ‘ஸ்லோ பாய்சன்’ (மெல்ல கொல்லும் விஷம்) கொடுக்கப்பட்டதா? என்பதை கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனை ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்டதா? என்று ஆணையம் தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ‘அதுபோன்று பரிசோதனை எதுவும் செய்யவில்லை. அந்த சமயத்தில் இதுபோன்று சந்தேகம் எழுப்பப்படாததால் சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. நச்சுத்தன்மை தொடர்பான பரிசோதனையில் அதுபோன்று எதுவும் இல்லை என்று முடிவு வந்தது. மற்ற பரிசோதனையிலும் ஸ்லோ பாய்சன் கொடுத்திருப்பது போன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது’ என்று பதில் அளித்தார்.

மருத்துவர் ரேமண்ட், ‘அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போயஸ்கார்டனில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயக்கநிலைக்கு சென்றதாக ஜெயலலிதா சிகிச்சையின் போது தன்னிடம் தெரிவித்தார்’ என்று வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

Next Story