பிரதமர் மோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்


பிரதமர் மோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 Nov 2018 12:00 AM GMT (Updated: 15 Nov 2018 12:00 AM GMT)

பிரதமர் நரேந்திரமோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் சந்திப்பதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

பதில்:- காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. இதில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வரும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ‘கிலுகிலுப்பை’ காட்டி வருகிறார். அது நிச்சயம் நடக்காது.

கேள்வி:- இடைத்தேர்தலில் 7 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசியிருப்பது, அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதே?

பதில்:- முதல்-அமைச்சர் பேசாததை பேசியதாக சொல்லக் கூடாது. 20 தொகுதிகளையும் நாங்கள் பிடிப்போம்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர விரும்புகிறதா?

பதில்:- கட்சி தலைமை எல்லோருடைய கருத்தையும் கேட்டு தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.

கேள்வி:- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து அ.தி.மு.க. நாளேட்டில் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது சரிதானா?

பதில்:- கமல்ஹாசன் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக அ.தி.மு.க. அரசின் மீது புழுதி வாரி தூற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியும்.

கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடியை பலசாலி என்று ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து ஏற்கக் கூடியதா?

பதில்:- பலமானவர்களா?, பலவீனமானவர்களா? என்பதற்கு தேர்தல் தான் விடை. இதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story