மாநில செய்திகள்

கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது + "||" + Between Cuddalore-Pamban The 'kajah' storm crosses the shore today

கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது

கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது
தீவிர புயலாக வரும் ‘கஜா’ கடலூர்-பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) கரையை கடக்கிறது. இதைத் தொடர்ந்து 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

தமிழகத்தில் கடலூர்-பாம்பன் இடையே இன்று மாலை முதல் கரையை கடக்க இருக்கிறது என்றும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ‘கஜா’ புயல் சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவிலும் (இரவு 8 மணி நிலவரப்படி) நிலைக்கொண்டு இருக்கிறது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பலத்த காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வீசும். சில நேரங்களில் 100 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

புயலின் போக்கு காற்றின் ஈரப்பதம் பொறுத்து கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரையில் 15-ந் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 15, 16, 17-ந் தேதிகளில் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும்.

தற்போது தமிழக அரசுக்கு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. புயல் நெருங்கும் சமயத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புயல் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்.

புயல் கரையை கடக்கும் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். 3 அடி உயரம் வரை கடல் அலை எழும்பும். இதனால் கடல் நீர் கரையை தாண்டி உள்புகுந்து வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புயல் கரையை கடப்பதால் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

புயல் பாதிப்புகள் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள காரைக்காலிலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்சொன்ன இடங்களில் புயல் கடக்கும் போது, வீடுகள் மற்றும் குடிசைகளின் மேற்கூரைகள், இணைக்கப்படாத இரும்பு தகடுகள் காற்றில் பறந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

கூம்பு வடிவிலான வீடுகளுக்கு பெரும்பாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படும். இதேபோல் சாலைகளும் பாதிக்கப்படும். மரங்கள் வேரோடு சாயும். மரங்களின் கிளைகளும் ஒடிந்து விழும்.

நெற்பயிர்கள், வாழை, பப்பாளி மரம் மற்றும் பழத்தோட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகும். மேலும் கடற்கரையோரங்களில் அரிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்ட தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புயல் கரையை கடக்க 2 மணி நேரம் ஆகும்

‘கஜா’ புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், எவ்வளவு நேரத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கஜா புயல் தற்போது வரை (நேற்று) மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் வருகிறது. அதன் நகர்வு, காற்றின் வேகத்தை பொறுத்து தான் எவ்வளவு நேரத்தில் கரையை கடக்கும் என்று கணிக்க முடியும். சராசரி நகர்வு வேகம் என்பது 20 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக 32 கிலோ மீட்டர் வரை கூட புயலின் நகர்வு இருந்து இருக்கிறது.

கஜா புயல் நல்ல வலுவான நிலையில்தான் வந்து கொண்டு இருக்கிறது. அதாவது 200 முதல் 300 கிலோ மீட்டர் பரப்பளவில் அது இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்து பார்க்கும்போது, சுமார் 1½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு
கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
2. கஜா புயல்: நிவாரணம் கோரி திருவாரூரில் சாலை மறியல்; 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
3. தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் - தஞ்சையில், அர்ஜூன் சம்பத் பேட்டி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என தஞ்சையில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.