புயல் பாதிப்பு ஏற்பட்டால் பெட்ரோல்-டீசலை பதுக்காமல் இருப்பு வைக்க வேண்டும் : எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்


புயல் பாதிப்பு ஏற்பட்டால் பெட்ரோல்-டீசலை பதுக்காமல் இருப்பு வைக்க வேண்டும் : எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Nov 2018 12:15 AM GMT (Updated: 15 Nov 2018 12:15 AM GMT)

புயல் பாதிப்பு ஏற்பட்டால் பெட்ரோல், டீசலை பதுக்காமல் இருப்பு வைக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை எழிலகத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்த கையேட்டினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறபோது, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல்மட்டமானது ஒரு மீட்டர் உயரத்துக்கு எழும் என்றும், இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்கள், நிவாரண முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள், தரை கொட்டகைகள், மின் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதாகவும், மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரையின்படி தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையரும், பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனரும் 32 மாவட்டங்களிலும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் போன்ற எரிபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பதுக்கக்கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தகவல் தொடர்பை உறுதி செய்யும் வகையில் ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருட்களை தலைமை இடங்களில் குறைந்தது 15 நாட்கள் வரையிலும், பாதிக்கப்படும் பகுதிகளில் 5 நாட்கள் வரையிலும் இருப்பில் வைத்துக்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் அதனை ஏற்று உறுதி அளித்துள்ளனர்.

மேலும் கஜா புயலினால் பாதிப்பு ஏற்படாத மாவட்டங்களில் உள்ள நகரும் செல்போன் கோபுரங்களை கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கடலில் குளிக்கவோ, குழந்தைகளை கடற்கரையில் விளையாட விடவோ, செல்பி எடுக்கவோ, கடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

முதல் நிலை மீட்பாளர்கள், பேரிடர் உதவிப்படை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியோர் அடங்கிய காத்திருப்போர் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு, நிவாரண முகாம்களுக்காக பயன்பாடு ஆகிய காரணங்களுக்கான தான் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை துறை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story