ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 15 Nov 2018 9:23 AM GMT (Updated: 15 Nov 2018 9:23 AM GMT)

ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை

ஜெயலலிதாவுக்கு ரூ. 913 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  ஜெயலலிதா தன் சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதே பரவலாக பேசப்படுகிறது. ஆனால், தன் சொத்துக்கள் எல்லாமே  மக்களுக்குத்தான் என்பதை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரணையின்போது வெளிப்படையாகவே அவர் தெரிவித்திருந்தார். 

2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனிக்கோர்ட்டு விசாரணையின்போது நீதிபதி மைக்கேல் குன்ஹா முன்னிலையில், ‘‘நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, அந்தக் காலத்திலேயே திரைப்படங்களில் நடித்து பலகோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றவள். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள்தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகைதீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கின் மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். ‘‘தட்ஸ் ஆல்’’ என்று கூறினார். 

நீதிமன்றத்தில் ஜெயலலிதா இவ்வாறு கூறியிருப்பது எந்தளவுக்கு சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று தெரியவில்லை. அவரது அண்ணன் மகளும், மகனும் நாங்கள்தான் வேதா நிலையத்தின் வாரிசு என்கிறார்கள். 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வாகிக்க நிர்வாகியை  நியமிக்கக் கோரி  சென்னை ஐகோர்ட்டில் அதிமுக நிர்வாகி புகழேந்தி  மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

Next Story