இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம்; எச்சரிக்கை


இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம்; எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2018 3:50 PM GMT (Updated: 15 Nov 2018 3:50 PM GMT)

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது.  கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.  புயல் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென்று குறையும்.  அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம்.  மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று வீசும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கஜா புயலை முன்னிட்டு கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 94 முகாம்களில், 14,455 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முகாம்களில் இருப்போருக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

Next Story