கஜா புயல் இப்போது எங்கு உள்ளது? சேத விவரங்கள்


கஜா புயல் இப்போது எங்கு உள்ளது? சேத விவரங்கள்
x
தினத்தந்தி 16 Nov 2018 5:29 AM GMT (Updated: 16 Nov 2018 5:29 AM GMT)

கஜா கரையை கடந்தது. புயல் மற்றும் சேத விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது. 

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என வானிலை மையம்  தகவல் வெளியிட்டு உள்ளது.   

* கஜா புயல் தற்போது திண்டுக்கல்  பகுதியில் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.  
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும், திண்டுக்கல்லில் 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

* கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

* கஜா புயலால் நாகை ரயில் நிலையம்  சின்னாபின்னமானது.
 
* ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும், 421 நிவாரண முகாம்களில் 81,948 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

* தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

* நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் என்று மின்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

* கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

* தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம் அடைந்து உள்ளன.

* சிவகங்கையில் சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் உயிரிழந்தார்.

* கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்த 4 வாலிபர்கள்  பலியானார்கள். கஜா புயலால் இதுவரை 9  பேர் பலியாகி உள்ளனர்.

* காஞ்சிபுரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான உழவு மாடு மீது மின் ஒயர் அறுந்து விழுந்ததில் அது சம்பவ இடத்திலேயே பலியானது.

Next Story