தமிழக அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு ராணுவம் போல களம் இறங்கி பணியாற்றுங்கள் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


தமிழக அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு ராணுவம் போல களம் இறங்கி பணியாற்றுங்கள் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:30 PM GMT (Updated: 16 Nov 2018 8:29 PM GMT)

புயல் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் ராணுவம் போல களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புயல் காற்றில் மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து கிடக்கும் காட்சிகள் மன வேதனையை தருகிறது. அந்த பகுதிகளில் மின் தடையும், போக்குவரத்து முடக்கமும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. புயலின் பின் விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்த செய்திகள் அதிர்ச்சியை தருகிறது. இந்நிலையினை சீர் செய்து சகஜ நிலை திரும்பி மக்களின் வாழ்வாதாரத்திற்கான நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதன் நடவடிக்கைகள் தொடர வேண்டும். புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயல்பு நிலை திரும்பும் வரையில் உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றி செய்து தரப்பட வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு எந்திரம் இயங்கிட வேண்டியது அவசியமாகும். தாமதமும், அலட்சியமும் காட்டினால் 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ள பாதிப்புகளை போல ஏராளமான இழப்புகள் ஏற்படும் என்பதையும் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை கண்டறிந்து மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்தை சீர் படுத்துதல் போன்ற நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். உடுப்பு அணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசு தரப்பில் மேற்கொள்ளும் மீட்பு பணிகளுடன் இணைந்து செயலாற்றுங்கள். எல்லா நிலையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நிற்பது தி.மு.க.வின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story