‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 8:45 PM GMT)

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் வருவதற்கு முன்னதாகவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் புயலை சாதாரணமாக எடுத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. ‘கஜா’ புயல் நாகை, வேதாரண்யத்தில் கரையை கடந்தாலும் தஞ்சாவூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் மார்க்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து அரபிக் கடலுக்கு செல்வதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாலும், மழையாலும் மின் கம்பங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள் ளது. குடிசைகள் சரிந்து உள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடத்தப்படுகிறது.

இதை முதல்-அமைச்சரும் அறிவித்து உள்ளார். மீட்பு பணிகளில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை உள்பட அனைத்து துறைகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. அரசு அமைத்து உள்ள முகாம்களில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு போதிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ குழு கண்காணித்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெரியாறு அணை நீர்மட்டம் அப்படியேதான் உள்ளது. ராமநாதபுரத்திற்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

தேனி மாவட்ட கலெக்டருடன் பேசி அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story