தண்டவாளத்தில் மரங்கள் விழுந்தன செந்தூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல மணி நேரம் தாமதம் பயணிகள் பரிதவிப்பு


தண்டவாளத்தில் மரங்கள் விழுந்தன செந்தூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல மணி நேரம் தாமதம் பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 9:34 PM GMT)

கஜா புயலால் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்தன. இதனால் செந்தூர் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன.

சென்னை,

கஜா புயல் நேற்று முன்தினம் இரவு நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் அருகே வந்தபோது தண்டவாளத்தில் மரம் சரிந்து விழுந்தது.

இதையடுத்து ரெயிலை மாற்றுப்பாதையில் இயக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் திருச்சி ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டு, பின்னர் விருத்தாசலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக நேற்று மதியம் 3.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தது.

இதைப்போல் மதுரையில் இருந்து நேற்று காலை புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை அருகே வந்தபோது, கஜா புயலின் தாக்கத்தால் தண்டவாளத்தில் மரம் சரிந்து விழுந்தது. இதையடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மரங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் மீண்டும் புறப்பட்டு, 3 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக, நேற்று இரவு 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் நடைமேடை 5-ல் வந்து சேர்ந்தது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வருவதால் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.20 மணிக்கு வந்ததால், சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டது.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர். இரவு நேரத்தில் தஞ்சாவூர் அருகே ரெயில் நீண்ட நேரம் நின்றதால் புயல், அச்சத்தில் பயணிகள் பரிதவித்தனர்.

காலை சென்னை வரவேண்டிய ரெயில் நீண்ட நேரம் தாமதமானதால் வழியில் சாப்பிட சரியான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர். மேலும் பயணிகள் பலர் ரெயிலில் இருந்து நடுவழியில் இறங்கினர். திருச்செந்தூரில் இருந்து பயணிகள் கூட்டத்துடன் புறப்பட்ட ரெயில், குறைந்த அளவு பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது.

Next Story