மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி + "||" + Passing through the river To the storm of Gaja 49 dead

கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி

கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி
கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல்-மழைக்கு 49 பேர் பலி ஆனார்கள்.
சென்னை,

வங்க கடலில் கடந்த 11-ந் தேதி உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த கஜா புயல், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது.

எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட சற்று தாமதமாக தரைப்பகுதியை நெருங்கிய புயலின் கண் பகுதி (மைய பகுதி) நள்ளிரவு 12.30 மணி அளவில் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது.

26 கிலோ மீட்டர் நீளமும், 20 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட கஜா புயலின் கண் பகுதி கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது.

அப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

புயல் கரையை கடந்தபோது அதிராம்பட்டினத்தில் மணிக்கு 110 கிலோ மீட்டர், நாகப்பட்டினத்தில் 100 கிலோ மீட்டர், காரைக்காலில் 74 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று சுழன்று அடித்தது.

தீவிர புயலாக கரையை கடந்த கஜா, அதிகாலை 5.30 மணி அளவில் சற்று வலு குறைந்து புயலாக மாறி நிலப்பகுதியில் மேற்கு திசையில் உள் தமிழகத்தை நோக்கி நகர்ந்து சென்றது.

இதனால் சிவகங்கை, திருச்சி, அரியலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. அந்த சமயத்தில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசியது.

நிலப்பகுதிக்குள் வந்த பிறகு மேலும் வலு குறைந்த புயல் பகல் 11.30 மணி அளவில் திண்டுக்கல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறி நிலைகொண்டு இருந்தது. பின்னர் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து தேனி மாவட்டத்தை கடந்து மாலையில் கேரளா வழியாக அரபிக்கடல் பகுதிக்கு சென்று மேலும் பலவீனம் அடைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

தமிழகத்துக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்றீ கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுவிட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.

கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின.

புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.

புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. புயல்-மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

திருச்சிக்கு நேற்று காலை வந்த 2 விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியாததால் சென்னை மற்றும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

புயலின் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக தலா 17 செ.மீ. மழை பெய்து உள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 16 செ.மீ., தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தலா 12 செ.மீ. மழையும், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு 11 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தலா 8 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கடலூர் மாவட்டம் தொழுதூரில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், காஞ்சீபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது தவிர மேலும் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து உள்ளது.