வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை


வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி:  19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை
x
தினத்தந்தி 17 Nov 2018 7:54 AM GMT (Updated: 17 Nov 2018 7:54 AM GMT)

வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதால் வரும் 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலைமையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னை  வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தமிழகத்தை கடந்து சென்ற கஜா புயல் தென்கிழக்கு அரபிக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புயலாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

நாளை வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகும். வரும் 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும். மீனவர்கள் வரும் 18, 19 தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், 19, 20 தேதிகளில் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என கூறினார்.

கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மலாய் தீவையும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வருகிற 19-ந்தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story