மாநில செய்திகள்

ராஜஸ்தானில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்டது சென்னையில் 2,190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல் + "||" + From Rajasthan The train was brought in 2,190 kg in Chennai Dog meat confiscated

ராஜஸ்தானில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்டது சென்னையில் 2,190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

ராஜஸ்தானில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்டது சென்னையில் 2,190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்
ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டுவரப்பட்ட 2,190 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை,

ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி என்ற இடத்தில் இருந்து சென்னை வழியாக மன்னார்குடிக்கு வியாழக்கிழமைகளில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த 15-ந் தேதி மாலை ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் நின்றபோது, அதில் உள்ள சரக்கு பெட்டியில் 12 இறைச்சி பெட்டிகள் சென்னைக்கு ஏற்றப்பட்டன.


சென்னை நோக்கி இந்த ரெயில் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவனுக்கு போன் ஒன்று வந்தது. அந்த போனில் பேசிய பெண், “பகத் கீ கோதியில் இருந்து மன்னார்குடி வந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி கொண்டுவரப்படுகிறது. அதை பறிமுதல் செய்து சோதித்து பாருங்கள்” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதனால், உஷார் அடைந்த அவர், உணவு பாதுகாப்பு அதிகாரி சதாசிவம் உள்பட 5 பேருடன் நேற்று காலை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து தயார் நிலையில் இருந்தார். பகத் கீ கோதியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்றனர். சரக்கு பெட்டியில் இருந்த இறைச்சி பெட்டிகளும் இறக்கி வைக்கப்பட்டன.

20 நிமிடங்கள் அங்கு நின்ற ரெயில் அதன்பிறகு மன்னார்குடி புறப்பட்டு சென்றது. நடைமேடையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த இறைச்சி பெட்டிகளை யாராவது எடுக்க வருகிறார்களா? என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்தனர். சுமார் 1½ மணி நேரம் அவர்கள் காத்திருந்தும், அங்கு யாரும் வரவில்லை.

அதற்குள், இறைச்சி பெட்டிகளில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பயணிகளும் மூக்கைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்ததால், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளே, ரெயில்வே சரக்கு சேவை பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து இறைச்சி பெட்டிகளை சோதனை செய்ய தொடங்கினார்கள்.

அந்த பெட்டிகளில் அழுகிய நிலையில் இறைச்சி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், அந்த இறைச்சி ஆட்டினுடையதா? என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. நெஞ்சுப் பகுதி, வால் அமைப்பு ஆகியவை நாய் கறி போல இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, இறைச்சி துண்டுகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியின் எடை 2,190 கிலோ இருந்தது. சுகாதாரமற்ற நிலையில் இருந்த இந்த இறைச்சி, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டன.

ரெயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது குறித்து கேள்விப்பட்ட இறைச்சிக் கடை உரிமையாளர்கள் சுமார் 30 பேர் எழும்பூர் ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கிடையே, இதற்கிடையே இறைச்சி கொண்டுவரப்பட்ட பெட்டிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?, அனுப்பியவர் யார்?, சென்னைக்கு யார் பெயரில் வந்துள்ளது? என்பதை ஆராய்ந்தனர். ஆனால், முறையான தகவல் எதுவும் அதில் இல்லை.

அனுப்புநர் முகவரியில் ஒரு இடத்தில் முகமது உமர் என்றும், மற்றொரு இடத்தில் ஓஸ்மன் விதர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றுக்கொள்பவர் முகவரியில் ஒரு இடத்தில் ஏ.இசட். சென்னை என்றும், மற்றொரு இடத்தில் இம்ரான் என்றும் எழுதப்பட்டுள்ளது. முகவரி விளக்கமாக இல்லை.

மேலும், அந்த பெட்டிகளில் ஒரு பகுதியில் இறைச்சி என்றும், மற்றொரு பகுதியில் மீன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பெட்டிகளிலும் இறைச்சியே இருந்தது. தொடர்ந்து, 42 மணி நேரம் ரெயிலில் பயணித்ததால், இறைச்சியை சுற்றி பெட்டிகளில் ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளும் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் செய்யாததால், இறைச்சி கெட்டு துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது.

ரெயிலில் ஒரு பொருள் அனுப்ப வேண்டும் என்றாலே, பொருள் பற்றிய விவரமும், அனுப்புநர், பெறுநர் முகவரியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் இல்லாததால், இந்த கெட்டுப்போன இறைச்சி கொண்டுவரப்பட்டதில், ரெயில்வே சரக்கு சேவை பிரிவு ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், சென்னைக்கு இதுபோல் சந்தேகத்துக்கு இடமான வகையில் கெட்டுப்போன இறைச்சி வருவது இதுதான் முதல் முறையா?, அல்லது வாரந்தோறும் இதே ரெயிலில் ஜோத்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டதா?, இந்த இறைச்சி ஓட்டல்களுக்கு சப்ளையானதா?, அப்படி என்றால் எந்தெந்த ஓட்டல்களுக்கு சப்ளையானது? என்பது போலீஸ் விசாரணையில் தான் தெரியவரும். இந்த இறைச்சி பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறைச்சியை பறிமுதல் செய்தது குறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்கள், அதற்கு முன்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதன் ஆரோக்கியம் குறித்து சோதனை செய்து ஒப்புதல் வழங்கிய பிறகே, வெட்ட அனுமதிக்கப்படும். வெட்டப்பட்ட இறைச்சியில் விற்பனை அனுமதியை உறுதி செய்து சீல் குத்தப்படும்.

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியில் இதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த இறைச்சி ரெயிலில் ஏற்றப்படுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பாகவே வெட்டப்பட்டதாக தெரிகிறது. போதிய குளிர்நிலையில் முறையாக பதப்படுத்தப்படாமலும் இந்த இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால், துர்நாற்றமும் வீசியது.

இறைச்சி குறித்த சந்தேகம் வந்துள்ளதால், பரிசோதனைக்காக இறைச்சி மாதிரிகள் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகே, ரெயில்வே துறையிடம் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...