பேரிடர் காலத்தில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு


பேரிடர் காலத்தில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Nov 2018 8:25 AM GMT (Updated: 18 Nov 2018 8:25 AM GMT)

பேரிடர் காலத்தில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை,

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.  இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை செய்வதற்காகவும் கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.  இரண்டாம் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப்பொருட்களையும் வழங்னார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

கஜா புயலால் பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க முதலமைச்சருக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. புயலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்யப்படவில்லை.

பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. பருவ காற்றும், மழையும் தொடங்குவதற்கு முன்பே சீர் செய்யப்பட்டிருக்க வேண்டிய நீர் நிலைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story