நாய் இறைச்சி பறிமுதல் எதிரொலி: சென்னை ஓட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திட்டம்


நாய் இறைச்சி பறிமுதல் எதிரொலி: சென்னை ஓட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2018 8:45 PM GMT (Updated: 18 Nov 2018 8:22 PM GMT)

சென்னையில் பெருமளவில் நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, நகரில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ அளவில் துர்நாற்றத்துடன் கெட்டுப்போன இறைச்சி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரெயிலில் கொண்டு வரப்பட்ட இறைச்சி, நாயின் இறைச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக இறைச்சியின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் சென்னை மக்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் ஓட்டலுக்கு சென்று இறைச்சி உணவை சாப்பிட மக்கள் அஞ்ச தொடங்கியுள்ளனர். தரமான இறைச்சி தான் சாப்பிடுகிறோமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே மிகுதியாக ஏற்பட்டுள்ளது.

நகரில் உள்ள ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காகவே ரெயிலில் இந்த இறைச்சி கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவ்வப்போது ஆய்வு நடத்தி கலப்படத்தை வெளிக்கொணரும் அதிகாரிகள், நாய் இறைச்சி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டியுள்ளது.

இதனால் நகரில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் குழு திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக மண்டலம் வாரியாக சந்தேகிக்கப்படும் ஓட்டல்கள் பெயர் பட்டியலிடப்பட்டு வருகிறது.

எனவே இந்த வாரத்தில் நகரின் ஓட்டல்களில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயிலில் கொண்டு வரப்பட்ட இறைச்சி நாயுடையதா, இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

அதே வேளை கெட்டுப்போன இறைச்சியை ரெயில் மூலம் அனுப்பிய இடைத்தரகர்கள் யார்? என்பது குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

சென்னைக்கு வந்த ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆட்டிறைச்சி சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரைஷி கூறியதாவது:-

ராஜஸ்தான், கொல்கத்தா, கூடூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு ஆடுகள் இறக்குமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு ஆடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. பொதுவாக ஆடுகளை உயிருடன் தான் இறக்குமதியோ, ஏற்றுமதியோ செய்யவேண்டும்.

ஆனால் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் அதிகளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடுகள் வெட்டப்பட்ட நிலையில் வாகனங்களில் ஏற்றி இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லக்கூடாது. அது சட்டத்துக்கு புறம்பானது.

சென்னையில் வில்லிவாக்கம், புளியந்தோப்பு, சைதாப்பேட்டை ஆகிய 3 இடங்களில் ஆடு இறைச்சி கூடங்கள் உள்ளன. இங்கு ஆடுகள் வெட்டப்பட்டு தான் அதன் இறைச்சியை வியாபாரிகள் சந்தைக்கு எடுத்து செல்லமுடியும். எனவே இந்த கெட்டுப்போன இறைச்சிகள் மொத்த விலைக்கு வாங்கும் பெரிய ஓட்டல்களுக்கு தான் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. ஏனென்றால் துர்நாற்றம் வீசக்கூடிய கெட்டுப்போன இறைச்சியை கறிக்கடைகாரர்கள் வாங்கமாட்டார்கள்.

எனவே ராஜஸ்தானில் இருந்து இந்த இறைச்சியை அனுப்பியது யார் என்று விசாரிக்க வேண்டும். இதற்கு உடந்தையான ரெயில்வே அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ரெயில்வே துறைக்கு தமிழக அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் அழுத்தம் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story