சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரம் 2½ லட்சம் பேர் முகாம்களில் தவிப்பு 1.17 லட்சம் வீடுகள் புயலால் சேதம்


சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரம் 2½ லட்சம் பேர் முகாம்களில் தவிப்பு 1.17 லட்சம் வீடுகள் புயலால் சேதம்
x
தினத்தந்தி 19 Nov 2018 12:15 AM GMT (Updated: 18 Nov 2018 11:12 PM GMT)

கஜா புயலில் 1 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 2½ லட்சம் பேர் இன்னும் முகாம்களில் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

‘கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 40 ஆயிரம் மின் கம்பங்களும் சாய்ந்தன. மேலும் சுமார் 350 மின்மாற்றிகளும் சேதம் அடைந்து உள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன.

புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணியில் 12 ஆயிரத்து 500 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது பல்வேறு இடங்களில் உள்ள 493 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொற்று நோய் பரவாமல் தடுக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 1,014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோரும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்திற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவார்கள்.

மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுனில் பாலிவால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அமுதா திருவாரூர் மாவட்டத்திற்கும், ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, நிவாரண பணிகளை துரிதப்படுத்தவில்லை என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கொத்தமங்கலம் அருகே நேற்று முன்தினம் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், 5 வாகனங்களை தீவைத்து எரித்தனர். நேற்று கொத்தமங்கலம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதேபோல், அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளவில்லை என்று கூறி, வம்பன் நாலுரோட்டில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார் நகரில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலந்து போகச் செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலும் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story