தஞ்சை: 50-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியவர் புயலில் உயிரிழந்த சோகம்...


தஞ்சை: 50-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியவர் புயலில் உயிரிழந்த சோகம்...
x
தினத்தந்தி 19 Nov 2018 12:20 PM GMT (Updated: 19 Nov 2018 12:20 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் புயலின் பாதிப்பில் இருந்து ஏராளமானோர் உயிரைக் காப்பாற்றிய ஒருவர், ஆடுகளை காப்பாற்ற முயன்ற போது மரம் விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை- திருச்சிற்றம்பலம் சாலை ஒட்டங்காடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், சாலையோர புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே சிங்கவனம் பகுதியை சேர்ந்த 24 வயதான கருப்பையா தன் சித்தப்பா சண்முகத்தின் வீடு இருக்கும் ஒட்டங்காடு பகுதியில் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதான என்ற மனைவியும், ஒன்றரை வயதில் கலைராஜன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 

கஜா புயலின் தாக்கம் ஆரம்பித்த போதே அந்த பகுதியில் குடிசைகளில் வசித்து வந்த மக்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார் கருப்பையா.. 

அந்த பகுதியில் குடிசை வீடுகளில் தங்கி இருந்த நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்களை எல்லாம் ஒவ்வொருவராக மீட்ட கருப்பையா, அவர்களை எல்லாம் பாதுகாப்பாக அங்கிருந்த முகாமுக்கு அழைத்து சென்றுள்ளார். 

சுமார் 50க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக முகாமுக்கு அனுப்பி வைத்த கருப்பையா, ஒவ்வொரு குடிசை வீடாக சென்று மக்கள் இருக்கிறார்களா? என்பதையும் உறுதி செய்தார். 

 கடைசியாக கொட்டகையில் இருந்த ஆடுகளை காப்பாற்ற சென்ற போது தான் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. புயலின் தாக்கத்தால் நிலை குலைந்த இரண்டு பெரிய மரங்கள் அந்த கொட்டகையின் மீது விழுந்தது. இதில் கொட்டகையின் உள்ளே ஆடுகளை காப்பாற்றும் முயற்சியில் இருந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கருப்பையாவால் காப்பாற்றப்பட்ட பலரும் இன்று பாதுகாப்பாக உள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்வளித்த நபர் மறைந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கருப்பையாவின் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் நிராதரவாக நிற்பது பார்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இதுபோன்ற இயற்கை பேரிடர் பல நேரங்களில் நல்ல உள்ளங்களையும் அடையாளம் காட்டுவதோடு சில சோகங்களையும் விட்டுச் செல்கிறது.

Next Story