கனமழை காரணமாக புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி


கனமழை காரணமாக புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Nov 2018 7:17 AM GMT (Updated: 20 Nov 2018 7:17 AM GMT)

கனமழை காரணமாக திருவாரூர், நாகையில் புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி.

சென்னை,

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது.   

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் சேதம் அடைந்து உள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க   மின்துறை, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் அமைச்சர்களிடம் கேட்டறிந்த பின்னர் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுக்கோட்டை வந்தார். பின்னர் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள மாப்பிள்ளையார் குளம், மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

 இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக முதல்வரின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதாக   தகவல் வெளியாகி உள்ளது.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பாதியில் திரும்பினார் முதல்வர் பழனிசாமி.

Next Story