“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது” தஞ்சை விவசாயிகள் கவலை


“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது” தஞ்சை விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Nov 2018 1:39 PM GMT (Updated: 20 Nov 2018 1:39 PM GMT)

“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது” என்று தஞ்சை விவசாயிகள் கவலையை தெரிவித்துள்ளனர்.



‘கஜா’ புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. நெற்பயிர்கள் மற்றும் கரும்பு பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயலினால் விவசாய பயிர்களை இழந்த விவசாயிகள் செய்வதறியாது திகைக்கும் நிலைதான் காணப்படுகிறது. பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் பயிரிடப்பட்டிருந்த கரும்பும் தப்பிக்கவில்லை. இதனால் 2019 பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது என தஞ்சை விவசாயிகள் கவலையை தெரிவித்துள்ளனர். 

கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புயல் எங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. மழையினால் அடிப்பகுதியில் மண் அரித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் விளைந்த கரும்புகள் அனைத்து அடியோடு சாய்ந்து விட்டது என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

“முக்கியமான அறுவடைக்காலத்தில் பயிர்கள் அழிந்துள்ளது. எங்களால் முடிந்ததை செய்வோம், ஆனால் என்ன செய்ய முடியும்? புயல் அனைத்தையும் கீழே சாய்த்துவிட்டது.” என்று வேதனையை தெரிவிக்கிறார்கள். சில நாட்களில் அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கும் சந்தைக்கும் கரும்புகள் செல்ல இருந்த நிலையில் மழை வந்து பாழாக்கி விட்டதாக கூறும் வலமர்கோட்டை விவசாயி, 1000 சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு லட்சம் கரும்புகள் அனுப்ப வேண்டும். ஆனால் தற்போது அனுப்ப முடியாத நிலை இருப்பதால் இந்தப் பொங்களுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது என்று வேதனை தெரிவித்துள்ளார். 

புயல் காரணமாக டெல்டா பகுதிகளில் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் அழிந்துள்ள நிலையில் தேங்காய் விலையும் உயரத்தொடங்கியுள்ளது.

“எங்களுடைய பயிர்கள் இழப்பிற்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும், படவில்லை என்றாலும் எங்களுடைய வாழ்வாதாரத்தை நாங்கள்தான் சரிசெய்ய வேண்டும். நாங்கள் அதற்கான பணியை செய்ய வேண்டும். விவசாயிகளில் சிலர் வீடுகளையும் இழந்துவிட்டார்கள்,” என்று கிராமத்தை சேர்ந்த விவசாயி மகதீஷ்வரன் கூறியுள்ளார். 


Next Story