சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை கையகப்படுத்துவதில் தாமதம் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்


சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை கையகப்படுத்துவதில் தாமதம் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2018 9:57 PM GMT (Updated: 20 Nov 2018 9:57 PM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை கையகப்படுத்துவதில் அரசு தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் அண்ணி இளவரசி, சகோதரி மகன் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட 1991-96-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரும் வாங்கிய 155 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்கவும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதேவேளையில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.100 கோடியை உறுதி செய்தது.


இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கும் சொந்தமான 155 சொத்துகளை அடையாளம் காண சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பித்து பல மாதங்கள் ஆகியும் அதுதொடர்பான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சசிகலா உள்பட 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தலா 10 கோடி ரூபாயை வசூலிக்கவும், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடிக்காக அவரது பெயரில் உள்ள சொத்துகளை ஏலம் விட்டு பணத்தை வசூலிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கில் தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஒருவர் கூறியதாவது:- ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் பெயரில் உள்ள 155 சொத்துகளை அடையாளம் காண தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது அந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சசிகலா உள்ளிட்ட 3 பேரிடமும் இருந்து 10 கோடி ரூபாயை வசூலிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த தொகையை செலுத்தாதபட்சத்தில் அவர்களது சொத்துகளை ஏலம் விட்டு அபராத தொகையை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘ஜெயலலிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு, தோட்டம், பங்களா, வணிக நிறுவனங்கள் போன்றவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் அனுபவித்து வருகின்றனர். சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விரைந்து கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவிலோ அல்லது வருவாய் வசூலிக்கும் சட்டத்திலோ அபராத தொகை எத்தனை நாட்களுக்குள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை. இதன்காரணமாகவே அபராத தொகையை வசூலிப்பதிலும், சொத்துகளை அரசுடமையாக்குவதிலும் அரசு தாமதப்படுத்தி வருகிறது’ என்று லஞ்ச ஒழிப்புத்துறை வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தினால், அது அ.தி.மு.க. அரசுக்கு எதிரானதாக இருக்கும் என்று கருதி இந்த நடவடிக்கையை தமிழக அரசு தாமதப்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Next Story