பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள காவல்துறையை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு


பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள காவல்துறையை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 5:51 AM GMT (Updated: 22 Nov 2018 5:51 AM GMT)

பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள காவல்துறையை கண்டித்து நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு சபரிமலையில் போலீசார் மேற்கொண்டுவரும் கெடுபிடிகளால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு காரில் புறப்பட்டார். அவர் நிலக்கல் பகுதியை அடைந்த போது அவரது காருடன் மேலும் சில வாகனங்களும் வந்தன.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு யதீர் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்த அரசு வாகனத்தை மட்டும் பம்பை செல்ல அனுமதித்தார். இதற்கு பொன் ராதா கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே பொன் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலேயே தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசாரின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும் தனது அரசு வாகனத்தை துறந்து விட்டு கேரள அரசு பஸ்சில் ஏறி பம்பைக்கு சென்றார். அவருடன் பா.ஜனதா தொண்டர்களும் சென்றனர்.

தொடர்ந்து அவர் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு சென்றார். அங்கு சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.பி. மீது போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில்,  சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள காவல்துறையை கண்டித்து நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

Next Story