திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 7:12 AM GMT (Updated: 27 Nov 2018 7:12 AM GMT)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை, 

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், கொள்கை அளவில் ஒத்துப்போவது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு, எனவே இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்பட எந்த கட்சியும் இல்லை.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எங்களுடன் கூட்டணி சேரவுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசி, தொகுதி உடன்பாடு வந்த பின்னரே கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றது என்பதை உறுதி சொல்ல முடியும் என்றும், இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் திமுகவுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை என்று துரைமுருகன் கூறியது கூட்டணி கட்சி தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடைய செய்துள்ளது. துரைமுருகன் அவரது பதிலை கூறிவிட்டார், ஸ்டாலின் அவரது முடிவை சொல்லட்டும் என்று  வைகோ கூறினார்.  இந்த சூழலில், நேற்று புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். 

கூட்டணி குறித்த சலசலப்புக்கு மத்தியில், இன்று  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

Next Story