கஜா புயல் நிவாரண நிதி; அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி முதல் அமைச்சரிடம் வழங்கப்பட்டது


கஜா புயல் நிவாரண நிதி; அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி முதல் அமைச்சரிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 27 Nov 2018 12:18 PM GMT (Updated: 27 Nov 2018 12:18 PM GMT)

கஜா புயல் நிவாரண நிதியாக அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. 
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.

கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்களில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்காக திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் பழனிசாமியிடம் ரூ.1 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல் அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை அ.தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்.

Next Story