ஆவடி அருகே பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, மனைவி அடித்துக்கொலை ஆந்திர தம்பதியின் கைவரிசையா?


ஆவடி அருகே பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, மனைவி அடித்துக்கொலை ஆந்திர தம்பதியின் கைவரிசையா?
x
தினத்தந்தி 27 Nov 2018 10:15 PM GMT (Updated: 27 Nov 2018 9:39 PM GMT)

ஆவடி அருகே பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவருடைய மனைவி அடித்துக் கொல்லப்பட்டனர். இது ஆந்திர தம்பதியின் கைவரிசையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த அய்யப்பன் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுகுமாரி (65). கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகதீசன், தனது மனைவி சுகுமாரியை பிரிந்து, அரசு அச்சகத்தில் வேலை செய்து வந்த விலாசினியை (58) திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் இல்லை. விலாசினி கணவரை பிரிந்து வாழ்ந்தவர்.

ஜெகதீசன் சேக்காடு பகுதியில் பண்ணை வீடு கட்டி விலாசினியுடன் வசித்து வந்தார். விலாசினி 1½ மாதத்துக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். இந்த வீட்டை சுற்றி அருகில் வீடுகள் கிடையாது. வயல் மட்டுமே உள்ளது. வயதான இருவரும் தங்களுக்கு உதவியாக இருக்க ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவியை வேலைக்கு வைத்தனர். மேலும் 2 நாய்களையும் வளர்த்து வந்தனர்.

அவர்களை தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு அறையில் 15 நாட்களுக்கு முன்பு குடிவைத்து தோட்டத்தை பராமரிக்கவும், தங்களுக்கு உதவியாக இருக்கும்படியும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜெகதீசன் வீட்டுக்கு தச்சுத்தொழிலாளி சந்திரசேகர் வேலை செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனே சந்திரசேகர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் ஜெகதீசன், விலாசினி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவரது வீட்டில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவியையும் காணவில்லை. வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

சந்திரசேகர் இது குறித்து ஆவடி காமராஜர் நகரில் வசிக்கும் ஜெகதீசனின் தம்பி கோபிநாத்திடம் கூறினார். அவர் உடனடியாக அங்கு வந்து பார்த்து ஆவடி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் ஜெயராமன், கர்ணன், ஆவடி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து காமராஜர் நகர் வழியாக ஆவடி ரெயில் நிலையத்துக்கு சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் ஜெகதீசன் வளர்த்து வந்த 2 நாய்களும் காயத்துடன் மீட்கப்பட்டன. அந்த நாய்களையும் கொலையாளிகள் தாக்கி அடித்து விரட்டியது தெரியவந்தது.

கொலைக்கு பயன்படுத்திய சுமார் 3 அடி நீளமுள்ள இரும்பு குழாயை கொலை நடந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வயலில் இருந்து போலீசார் மீட்டனர். அதில் ரத்தக்கறை இருந்தது. கொலையாளி கையில் துணியை சுற்றிக்கொண்டு இரும்பு குழாயால் அடித்து கொலை செய்திருப்பதாகவும், அதில் கொலையாளியின் கைரேகை பதியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் சந்தேகப்பார்வை ஆந்திராவை சேர்ந்த தம்பதி மீது விழுந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவருடைய மனைவி நேற்று அதிகாலையில் ஜெகதீசன், விலாசினி ஆகியோரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்து நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஆவடி ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை பிடித்தால் தான் கொள்ளை போன பணம், நகை, மற்றும் பொருட்களின் விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story