நாகை, திருவாரூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கினார்


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2018 12:00 AM GMT (Updated: 28 Nov 2018 6:52 PM GMT)

நாகை மாவட்டத்தில், புயலால் சேதம் அடைந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நாகை,

நாகை மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகை மாவட்டத்தில் காலை 9 மணிக்கு ஆய்வு தொடங்கி மாலை 3.30 மணிக்கு வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு அருகே நிறைவு செய்தனர்.

முன்னதாக நாகை சுற்றுலா மாளிகை அருகே புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக வைக்கப்பட்ட புகைப்பட காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் விழுந்தமாவடி கிராமத்தில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அந்த கிராமத்தில் உள்ள கைப்பம்பில் இருந்து வரும் குடிநீர் நல்ல தண்ணீராக உள்ளதா? என குடித்து பார்த்தார். பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகள் மற்றும் மரங்களை பார்வையிட்டார்.

இதேபோல் வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் முகாமில் தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முகாமில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உணவையும் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

முகாமில் தங்கியிருந்த மக்கள் வீடுகள் புனரமைக்க தார்ப்பாய்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கோவில்பத்து கிராமத்தில் ரூ.152 கோடியில் கட்டப்பட்டு புயலால் சேதமடைந்த தானிய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார்.

தொடர்ந்து வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முகாம்களில் தங்கியிருந்தவர்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் மா மரங்கள், நெற்பயிர்களையும் பார்வையிட்டார். புஷ்பவனம் கிராமத்தில் கடல் நீர் புகுந்ததால் அரை கிலோ மீட்டர் தூரம் இடுப்பளவிற்கு சேறு படிந்திருந்ததை பார்வையிட்டார்.

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, பாத்திரங்கள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணம் பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் கஜா புயலால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சமும், குடிசை வீடுகள் சேதம் அடைந்த 354 பேருக்கு ரூ.57 லட்சத்து 60 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது. மீட்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 49 ஆயிரம், மா, முந்திரி போன்ற மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகள் 10 பேருக்கு ரூ.55 ஆயிரத்து 890, தென்னை மரங்கள் சேதம் அடைந்தற்காக 20 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 47,650, கண்ணாடி நாரிழை படகுகளுக்கு நிவாரணமாக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரம் என மொத்தம் 443 பேருக்கு ரூ.96 லட்சத்து 60 ஆயிரத்து 540 நிவாரண தொகை வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிசை வீடுகளை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிச்சன்கோட்டகத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் 4 ஏக்கர் நிலத்தில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி கிடப்பதை பார்த்த முதல்-அமைச்சர், வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வயலுக்குள் இறங்கி அழுகிய நெற்பயிர்களை பார்வையிட்டு இருதயராஜூக்கு ஆறுதல் கூறினார்.

கட்டிமேடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 750 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பெட்டகத்தை முதல்-அமைச்சர் வழங்கினார். பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 350 பேருக்கு நிவாரண பெட்டகத்தை வழங்கினார்.

திருத்துறைப்பூண்டியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட அவர் வடபாதி ஆற்றங்கரையில் புயலால் குடிசை வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். திருவாரூர்-நாகை புறவழி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 607 பேருக்கு ரூ.73 லட்சத்து 97 ஆயிரத்து 600 மதிப்பிலான நிவாரண பெட்டகத்தை வழங்கினார்.

Next Story