திருவொற்றியூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி படிக்கட்டு பயணத்தால் விபரீதம்


திருவொற்றியூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி படிக்கட்டு பயணத்தால் விபரீதம்
x
தினத்தந்தி 1 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், தவறி விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூர், 

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கபிலன் (வயது 14). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவர் கபிலன், நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வள்ளலார் நகரில் இருந்து மாதவரம் செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 56 டபிள்யூ) சென்றார். அவர், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பஸ் தட்டு தடுமாறி சென்றது. பெரியார் நகர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியபோது, ஒருபுறமாக சாய்ந்தபடியே சென்றது.

இதனால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர் கபிலன், சாலையோரம் இருந்த மின்சார பெட்டியில் மோதி பஸ்சுக்கு அடியில் விழுந்து விட்டார். அவர் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவர் கபிலன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறி, சாலையை சீரமைக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மீஞ்சூரை அடுத்த விச்சூரைச் சேர்ந்த விநாயகம் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story