ரகசிய விசாரணை விதியை ரத்து செய்ய வேண்டும்: “லோக் ஆயுக்தா ஒரு காகிதப்புலி” மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


ரகசிய விசாரணை விதியை ரத்து செய்ய வேண்டும்: “லோக் ஆயுக்தா ஒரு காகிதப்புலி” மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 1 Dec 2018 5:00 AM IST (Updated: 1 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

லோக் ஆயுக்தா அமைப்பு ஒரு காகிதப்புலி என்று கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு, “பவர்” இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு இப்போது ‘பல்’ இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

‘கமிஷன்’, ‘கரெப்ஷன்’, ‘கலெக்சன்’ என்று மெகா ஊழலில் மூழ்கி, கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு சுப்ரீம் கோர்ட்டு அரசின் தலையில் ஓங்கிக் ‘குட்டு’ வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அப்படிப்பட்ட லோக் ஆயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க. அரசு தாமதம் செய்தது. மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்த பிறகு இப்போது லோக் ஆயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக்கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக்கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.க.வில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முதல்-அமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

லோக் ஆயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டுவரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்துவிடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் ஆயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க. அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல - ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும்போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.

ஆகவே, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு டெல்லியில் கூடி போராட்டங்களையும், மாபெரும் பேரணியையும் நடத்தியிருப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவப் போக்குதான் காரணம்.

விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மத்திய-மாநில அரசுகளின் போக்கு கண்டத்திற்குரியது. அதேநேரத்தில் விவசாயிகள் தங்கள் அறவழிப் போராட்டங்களை அமைதியாகவும், நாகரிகமாகவும், நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும்.

தமிழகத்தில் பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், தமிழக மக்களே முகம் சுழிக்கும் வகையிலும் நடைபெறும் நிர்வாண போராட்டங்களை தி.மு.க. சார்பில் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது. இத்தகைய போராட்ட முறைகள், போராட்டத்தின் மைய நோக்கத்தை திசை திருப்புவதாக அமைந்துவிடும்.

ஆகவே, இதுபோன்ற நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு, தமிழகத்தின் மாண்பையும், மதிப்பையும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story