காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி:முதலமைச்சர் அறிவிப்பு


காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி:முதலமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 7:56 PM IST (Updated: 1 Dec 2018 7:56 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் 2003–ம் ஆண்டு ராணுவ வீரராக பணியில் சேர்ந்தார். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு காஷ்மீரில் லே என்ற பகுதியில் சரவணனும் மற்றும் 3 வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதற்காக நிலக்கரியை குவித்து நெருப்பு மூட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சரவணனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் கரிசல்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. பணியின் போது உயிரிழந்த சரவணனின் உடல் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

சரவணனுக்கு பாண்டி மீனா(31) என்ற மனைவியும், 11 வயதில் அருந்ததிராய் என்ற மகளும் உள்ளனர். அருந்ததிராய் திருப்பரங்குன்றத்தில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த மதுரை கரிசல்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Next Story