சென்னை அண்ணாநகரில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து


சென்னை அண்ணாநகரில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 1 Dec 2018 9:45 PM GMT (Updated: 2018-12-02T00:26:54+05:30)

சென்னை அண்ணாநகரில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணா நகர் மேற்கு பார்க் ரோட்டில் 20 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ‘ஏ’ மற்றும் ‘பி’ என 2 பிரிவுகளை கொண்ட இந்த 20 மாடி குடியிருப்பில் 120 வீடுகள் உள்ளது. சுமார் 600 பேர் வரை இந்த குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

நேற்று காலை 6 மணியளவில் இந்த குடியிருப்பின் 18-வது மாடியில் வசித்துவரும் அமானுல்லா பாஷா என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு, அந்த வழியாக சென்றவர்கள் கூச்சலிட்டனர்.

அதற்குள் அடுக்குமாடி குடியிருப்பில் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரவு காவலாளிகளும், குடியிருப்புவாசிகளும் தீ, தீ என கூச்சலிட்டபடியே பதற்றத்துடன் கீழே இறங்கி ஓடிவந்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் சாதாரண தீயணைப்பு வாகனங்களால் தீயை அணைக்க இயலாது என்பதால் 2 ராட்சத ஏணிகள் கொண்ட தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளில் உள்ள குளியல் அறை, கழிவறையில் இருந்த குழாய்களை திறந்துவிட்டும், குடியிருப்பில் உள்ள தீயணைப்பு சாதனங்களை கொண்டும் தீயை அணைக்க முற்பட்டனர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் சரவணன், முகமது ஷா மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர் சிவகுமார் ஆகியோர் விரைந்து வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தீ விபத்தில் கரும்புகை வெளியேறிதால் அந்த குடியிருப்பில் வசித்து வரும் மசூர் (63 )என்ற முதியவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீ விபத்து ஏற்பட்ட 18-வது மாடியில் இருந்த தீபா (25) உள்பட 13 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் புறநோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் மின்சார வயர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் இணைப்பு வயர்கள், உரசியதால் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

தீ விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story