விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; கமல்ஹாசன்


விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; கமல்ஹாசன்
x
தினத்தந்தி 2 Dec 2018 6:59 AM GMT (Updated: 2 Dec 2018 6:59 AM GMT)

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம், பள்ளத்தூர், செருபாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நேற்று பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அதிராம்பட்டினத்துக்கு சென்ற கமல்ஹாசன், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு, ஏரிப்புறக்கரை, கரையூர்தோப்பு மற்றும் பிள்ளையார் கோவில் பகுதிகளை பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மகிழங்கோட்டைக்கு கமல்ஹாசன் சென்றார்.

தொடர்ந்து அவர் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் உங்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு அந்த பெண்கள், தங்களுக்கு எந்த நிவாரண தொகையும் இதுவரை வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பினார்.  அவரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அரசு சரியாக செய்யவில்லை என கூறுகிற விசயங்களை எதிர்க்கட்சிகளின் குரலாக பார்க்க கூடாது.  மக்களின் குரலாக அரசு பார்க்க வேண்டும்.  நாங்கள் அறவழியில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார்.

Next Story