தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2018 5:15 AM IST (Updated: 3 Dec 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நாளை (செவ்வாய்) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 1-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் ‘கஜா’ புயல் பெரிய அளவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கியது.

அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் மழை பெய்தது. பின்னர், கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் நிலையில், வருகிற 4, 5, 6-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.

4-ந் தேதியை பொறுத்தவரையில் (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும். கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

வருகிற 5 (புதன்கிழமை), 6-ந் தேதிகளில் (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 5-ந் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். 4, 5, 6-ந் தேதிகளில் சில முறை மிதமான மழையும் பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story