‘ஆணவ கொலைகளை தடுக்க பாதுகாப்பு படை அமைப்போம்’ பிறந்த நாள் விழாவில் கி.வீரமணி பேச்சு
‘ஆணவ கொலைகளை தடுக்க பாதுகாப்பு படை அமைப்போம்’ என்று பிறந்த நாள் விழாவில் கி.வீரமணி பேசினார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 86-வது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். விழாவில் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’, ‘வாழ்வியல் சிந்தனைகள்’, ‘தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்’, ‘தமிழரின் பரிணாமம்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வாழ்த்தி பேசும்போது, “பொதுவாக தலைவர்கள் இறந்தால் செயல்பாட்டில் சில தொய்வுகள் ஏற்படும். ஆனால் பெரியார் மறைவுக்கு பிறகு, அவருடைய கொள்கையை உலக அளவில் கொண்டுசென்ற பெருமை கி.வீரமணியை சாரும். திராவிட சமுதாயம் மேம்பட கி.வீரமணி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்” என்றார்.
கி.வீரமணி ஏற்புரை வழங்கி பேசியதாவது:-
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். ஆனால் எங்களுக்கு நிரந்தர எதிரியும் உண்டு, நிரந்தர நண்பர்களும் உள்ளனர். பிறந்தநாள் கொண்டாடுவதில் ஆர்வம் இல்லாத எனக்கு, 75-வது வயது பிறந்தநாள் விழாவின்போது அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட கூறினார்.
அதில் இருந்து பிறந்த நாளாக இல்லாமல், பெரியாரின் கருத்துகளை பரப்புவதற்கும், விடுதலை பத்திரிகையின் சந்தா வழங்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் நடந்துவருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படை அமைத்து அரணாக இருப்போம். ஓசூரில் வரும் 30-ந் தேதி சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து கூறியதுடன், விழாவுக்கு நேரில் வந்து கி.வீரமணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலினுக்கு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கி.வீரமணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்கள். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கஜா புயல் நிவாரண நிதிக்காக மேடையில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலில் கி.வீரமணி, அவருடைய மனைவி மோகனா ஆகியோர் ரூ.15 ஆயிரம் போட்டு தொடங்கிவைத்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களும் நிதி வழங்கியதன் மூலம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் வசூலானது.
பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், ஏ.ஆர்.லட்சுமணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story