திருச்சியில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகள் உயிர்தப்பினர்


திருச்சியில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகள் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 3 Dec 2018 1:57 AM IST (Updated: 3 Dec 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது.

திருச்சி, 

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு தனியார் விமானம் தினமும் இரவு 1.50 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் அந்த விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் செல்வதற்காக 150 பயணிகள் சோதனை முடிந்த பிறகு விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட்டு செல்ல விமானநிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானம் புறப்பட்டு ஓடுபாதை நோக்கி மெதுவாக நகர்ந்தது. ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றபோது, விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. உடனே விமானி இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்றும், மீண்டும் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டுவரும்படியும் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்தார். பின்னர் மீண்டும் அந்த விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டுவந்து நிறுத்தினார்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பொறியாளர் குழுவினர் விமானத்தின் என்ஜின் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பழுதை சீரமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் சிங்கப்பூரில் இருந்து வரவேண்டும் என்பதால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் விமானம் திருச்சியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். மாற்று விமானத்தில் அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்ப ஏற்பாடு நடந்துவருகிறது. சில பயணிகள் பயணத்தை ரத்துசெய்துவிட்டு புறப்பட்டு சென்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story