கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னை, வாழை மரங்களைப் பார்வையிட மத்திய அரசு அதிகாரிகள் வருகை
கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னை, வாழை மரங்களை 3 நாட்கள் பார்வையிட மத்திய அரசு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கஜா புயலால் புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கான மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு, பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.
இதற்கிடையே மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த வாரம் பார்வையிட்டார். நாகப்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் மக்களை சந்தித்து அவலங்களைக் கேட்டறிந்தார்,
மண்எண்ணெய்
பாதிப்புகளை கேட்டறிந்ததோடு நின்றுவிடாமல், அவற்றைத் தீர்ப்பதற்காக அங்கிருந்தபடி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எடுத்த நடவடிக்கைகள்தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றபோது அங்கிருந்த வீடுகளில் மின்சாரம் இல்லாததோடு, மண் எண்ணெயும் இல்லாததை அவர் அறிந்துகொண்டார். எவ்வளவு மண்எண்ணெய் தேவைப்படும் என்ற தகவலை தமிழக உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து தனது கட்சி நிர்வாகி மூலம் கேட்டு கேட்டு அறிந்து கொண்டார்.
கடுமையாக...
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானைத் தொடர்புகொண்டு, கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மண்எண்ணெயை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டபோது, சில உயர் அதிகாரிகளை அழைத்து, “ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறீர்கள்? நானாக இருந்தால் கடுமையாக செயல்பட்டு வேலை வாங்கிவிடுவேன்” என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.
அதிகாரிகள் வருகை
மேலும், தென்னை, வாழை விவசாயிகளுக்கு ஆறுதல் கூறும்போது, தென்னை மரக்கன்றுகள் எவ்வளவு தேவைப்படும் என்றும், 10 லட்சம் கன்றுகள் தேவைப்பட்டாலும் அவற்றை அந்தமானில் இருந்து கடற்படை கப்பல்கள் மூலம் வரவழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
அதோடு நின்றுவிடாமல் அதை செயல்படுத்தும் வகையில், மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதமோகன் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக தென்னை மரங்கள், வாழை மரங்களை பார்வையிடுவதற்காக 4, 5 மற்றும் 6-ந் தேதிகளில் மத்திய தென்னை வாரியம் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் வருகை தரவுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
Related Tags :
Next Story