சென்னை துறைமுக விரிவாக்கத்தின்போது கடற்படைக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் தமிழ்நாடு-புதுச்சேரி பகுதி அதிகாரி வலியுறுத்தல்


சென்னை துறைமுக விரிவாக்கத்தின்போது கடற்படைக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் தமிழ்நாடு-புதுச்சேரி பகுதி அதிகாரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:30 PM GMT (Updated: 3 Dec 2018 9:02 PM GMT)

சென்னை துறைமுக விரிவாக்க திட்டத்தில் இந்திய கடற்படைக்கு தனியாக இடம் ஒதுக்கவேண்டும் என்று மாநில அரசிடம் கடற்படை வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

கடற்படை தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு-புதுச்சேரி பகுதி கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் அலோக் பட்னாகர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4-ந் தேதி கடற்படைதினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடற்படை தினம் நாளை (இன்று) நடக்கிறது.

இலங்கையிடம் வலியுறுத்தல்

கடற்படை தினசரி பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்காக கடற்படையின் பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள கடற்படை தளத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. சென்னை துறைமுக விரிவாக்க திட்டத்தில் இந்திய கடற்படைக்கு தனியாக இடம் ஒதுக்கவேண்டும் என்று மாநில அரசிடம் கடற்படை வலியுறுத்தி இருக்கிறது.

கடத்தலை தடுப்பது, மீனவர்களை காப்பது போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகளில் கடற்படை ஈடுபட்டு வருகிறது.

கஜா புயலில் மீனவர்களிடம் நாங்கள் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தோம். தொடர்ந்து மீனவர்களை காத்து வருகிறோம். அடுத்த ஆண்டு இந்திய-இலங்கை கடற்படை அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளது. அதில், இலங்கை கடற்படையிடம் சர்வதேச கடத்தல் தடுப்பு, கள்ள நோட்டுகள் தடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த சந்திப்பில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதையும், நமது மீனவர்களை தாக்கக்கூடாது என்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் வலியுறுத்துவோம்.

தாக்குவது நோக்கமல்ல

மீனவர்கள் எதிர்பாராத விதமாக சர்வதேச எல்லைப்பகுதியை தாண்டி விடுகிறார்கள். எனவே அவர்களை தாக்காமல் திருப்பி அனுப்பவேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம். இரு நாட்டு மீனவர்களிடமும் மோதல்கள் ஏற்படுகிறது. இயற்கை பேரிடரின்போது முதலில் உதவி செய்வது இந்திய கடற்படைதான். கஜா புயல் நேரத்தில் 4 கப்பல்களில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப்பணியில் கடற்படை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

சீன கப்பல்கள் இங்கு வருவதை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கின்றோம். இந்தியக் கடற்படைக்கு எந்த நாட்டையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. மாறாக மீனவர்களை காப்பதுடன், கடத்தலை முற்றிலும் தடுப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். அதே நேரம் எந்த எதிரியையும் எதிர்கொள்ளவும் கடற்படை தயாராக உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story