கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கைது


கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 2018-12-04T02:51:08+05:30)

7 பேர் விடுதலையை வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி கவர்னர் மாளிகையின் அருகே சின்னமலையில் உள்ள வேளச்சேரி சாலையில் நேற்று அவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் பாக்கியம், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வைகோ கைது

முற்றுகை போராட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகைக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக வேளச்சேரி சாலையின் ஒரு புறத்தில் இரும்பு தடுப்புகள் போடப்பட்டு, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து தடையை மீறி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், ரா.முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, என்.ஆர்.தனபாலன், வேல்முருகன், தியாகு, திருமுருகன் காந்தி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சட்டவிரோதம்

கைது செய்யப்படுவதற்கு முன்பு வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்தார். இந்த 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அந்த தீர்மானம் உள்துறை அமைச்சகத்துக்கு சென்று இருக்கிறது. அங்கு எப்படி சென்றது? கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு அனுப்பி இருந்தால் அது சட்டவிரோதம்.

ஒருவேளை கவர்னர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, அதை உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தால், அது ஈழத்தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம், முதல்-அமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பதற்கு தார்மீக உரிமையும் இல்லை.

7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று இருக்கும் நேரத்தில், 3 பெண்களை இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி பஸ்சுடன் எரித்த வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை கவர்னரும், முதல்-அமைச்சரும் விடுதலை செய்து இருக்கிறார்கள். சட்டத்தை அவமதிக்கும் கவர்னர் உடனடியாக ராஜ்பவனை விட்டு வெளியேறவேண்டும்.

அடுத்தகட்ட போராட்டம்

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன போராட்டம் நடத்தவேண்டும் என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். கவர்னர் இனிமேல் தமிழகத்தில் எங்கு சென்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கி.வீரமணி-திருமாவளவன்

போராட்டத்தின்போது கி.வீரமணி பேசும்போது, “7 தமிழர்கள் விடுதலையில் கவர்னர் செய்தது முற்றிலும் தவறு. இதற்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும். இல்லை என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சட்டரீதியாக விலக நேரிடும்” என்றார்.

திருமாவளவன் பேசுகையில், “7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் ஏன் தயங்குகிறார்? என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., சங்க்பரிவார் அமைப்புகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமையிலான அணி வலுப்பட வேண்டும். இந்த கூட்டணி உடையாதா? என்று சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த கூட்டணியை உடைக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” என்றார்.

ரா.முத்தரசன் பேசும்போது, “தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் கவர்னர் ஆகியோர் சேர்ந்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மறுக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தை மதிக்காமல் மீறினால், மக்களும் அதேபோன்று மீறுவார்கள்” என்றார்.

Next Story