2022-ம் ஆண்டுக்குள் 187 புதிய மருத்துவ கல்லூரிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தகவல்


2022-ம் ஆண்டுக்குள் 187 புதிய மருத்துவ கல்லூரிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 2018-12-04T03:31:15+05:30)

2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 187 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு நிதி அயோக் அமைப்பிடம் பரிந்துரை செய்துள்ளதாக துணை ஜனாதிபதி கூறினார்.

சென்னை, 

கோவையை மையமாக கொண்ட குடலியல், ஜீரண மண்டல நோய்களுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியான ‘ஜெம்’ ஆஸ்பத்திரியின் கிளை திறப்பு விழா சென்னை பெருங்குடியில் நேற்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக ‘ஜெம்’ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு வரவேற்பு உரையாற்றினார். நிறைவில் ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ்.அசோகன் நன்றி உரையாற்றினார். விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், டாக்டர் சி.பழனிவேலுவின் மனைவி ஜெயா பழனிவேலு, மகன்கள் டாக்டர் பி.செந்தில்நாதன், டாக்டர் பி.பிரவீன் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மனதுக்கு நெருக்கமானவை

தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமானவை. தமிழகம் வளமான நிலத்தை மட்டும் கொண்டது அல்ல. புத்தி கூர்மையானவர்களையும் கொண்டது. தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த நாட்டின் நாகரிக வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் அரசியலுக்காக அரும்பாடு பட்டுள்ளனர்.

தமிழகம் சட்டம்- ஒழுங்கு, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

187 மருத்துவ கல்லூரி

இந்தியாவில் விரிவான மருத்துவ சேவைகளை வழங்குவதில், நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான வித்தியாசம் பல்வேறு வழிகளில் பெரும் சவாலாக உள்ளது.

எனவே, தனியார்துறையினரும் அரசாங்கத்துடன் இணைந்து மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டிய தருணம் ஏற்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆரம்பக் கட்ட மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்களை ஏற்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு அவசியமாகிறது. அதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து இருக்கிறது. வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 187 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க ‘நிதி அயோக்’ அமைப்பிடம் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதன்மை மாநிலம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 2030-ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2016-ம் ஆண்டுக்குள் அடைந்த 3 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டும் அல்லாது மிகச்சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வரும் காரணத்தால், இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “தமிழகம் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு மருத்துவ கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் டாக்டர்களை உருவாக்கி வருகிறது. ஏழைகளும் உயர்தர சிகிச்சை பெறும் வகையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

Next Story