ஐகோர்ட்டு நீதிபதிகள் யோசனை ஏற்பு இன்று முதல் நடைபெற இருந்த அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு


ஐகோர்ட்டு நீதிபதிகள் யோசனை ஏற்பு இன்று முதல் நடைபெற இருந்த அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 12:15 AM GMT (Updated: 3 Dec 2018 11:19 PM GMT)

ஐகோர்ட்டு நீதிபதிகளின் யோசனையை ஏற்று, இன்று முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தள்ளிவைத்து உள்ளனர்.

மதுரை,

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

வேலைநிறுத்தம் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தது.

இதையடுத்து அந்த அமைப்பினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர்.

மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்கு

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளது. மேலும் சமீபத்தில் ‘கஜா’ புயலால் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகளும் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு பகல் 1 மணி அளவில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி பகல் 1 மணி அளவில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தடை விதிக்க கோரிக்கை

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் செல்வம், “அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் அடுத்தவாரம் அரையாண்டு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மாணவ-மாணவிகள் அவதிக்கு ஆளாவார்கள். ‘கஜா’ புயல் மீட்பு-நிவாரண பணிகளும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.

பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாஜி செல்லன் வாதாடுகையில் கூறியதாவது:-

ஊதிய உயர்வில் பாரபட்சம்

மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் உயர் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வும், மற்றவர்களுக்கான ஊதிய உயர்வும் பாரபட்சமாக இருக்கிறது. மேலும் நிலுவையில் உள்ள 21 மாத சம்பள பாக்கியும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு உத்தரவை தமிழக அரசு முறையாக நிறைவேற்றாமல் தட்டிக்கழிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. அரசு ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பது தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்று கடந்த மாதம் முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே ஸ்ரீதர் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்த நிலையில், கடந்த 27-ந் தேதி அந்த அறிக்கை அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்து உள்ளது.

புயல் பாதித்த மாவட்டங்கள்

இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கஜா புயல், மீட்பு நிவாரண பணிகள் நடைபெறும் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தை தள்ளிவைத்துவிட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபடலாம் என்றும், வெளியூரில் இருந்து அந்த மாவட்டங்களுக்கு சென்றுள்ளவர்களும் தங்களது வேலைகளை தொடர்ந்து செய்யலாம் என்றும் முடிவு எடுத்து உள்ளோம்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்கி இருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டு மேற்படி சங்கத்தினர் முடிவெடுத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

10-ந் தேதி அறிக்கை தாக்கல்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், இதுதொடர்பான அறிக்கையை வருகிற திங்கட்கிழமை (10-ந் தேதி) தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “அதுவரை (அதாவது திங்கட்கிழமை வரை) அரசு ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தள்ளிவைக் கலாமா?” என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாஜி செல்லனிடம் கேட்டனர்.

அதற்கு அவர், இதுபற்றி ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து சிறிது நேரம் இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.

தற்காலிகமாக தள்ளிவைப்பு

அப்போது ஆஜரான வக்கீல் ஷாஜி செல்லன், “கோர்ட்டு கேட்டுக்கொண்டதன் பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக தெரிவித்து உள்ளனர்” என்றார்.

இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி வருகிற 10-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஜாக்டோ-ஜியோ அறிக்கை

மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீதிமன்றம் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நடத்த இருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான எழுத்து பூர்வமான அறிக்கையினை வருகிற 10-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் தமிழக அரசு அறிக்கையினை தாக்கல் செய்யும் வரை, அதாவது வருகிற 10-ந் தேதி வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை தள்ளிவைப்பதற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அடுத்து வழக்கு விசாரணைக்கு வரும் நாளான 10-ந் தேதி வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தள்ளிவைப்பதற்கு ஒருங்கிணைப்பாளர் கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு தலைவர்களின் கூட்டத்தினை ஏற்பாடு செய்து இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் முறையிடப்பட்டது.

காலவரையற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் பாதிக்கப்படும். எனவே, இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு தொடரப்படும் வழக்கை, உடனே விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று அந்த இயக்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போராட்டம் தொடர்பான பிரச்சினையை எப்படி கையாள வேண்டும்? என்பது தமிழக அரசுக்கு தெரியும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறினார்கள். அதே நேரம், வழக்கு தொடர்ந்தால், வரிசைப்படி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்கள்.

Next Story