மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாதிக்கும், ஒகேனக்கல்லில் கட்டலாம் - தம்பிதுரை


மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாதிக்கும், ஒகேனக்கல்லில் கட்டலாம் - தம்பிதுரை
x
தினத்தந்தி 4 Dec 2018 5:21 AM GMT (Updated: 2018-12-04T10:51:26+05:30)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர்,

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து தான்தோன்றிமலையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

பின்னர்  தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில நலன்களை கருத்தில் கொள்ளாததால், பாஜகவால் பல மாநிலங்களில் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து கொண்டு  மேகதாது  அணை கட்டும் திட்டத்தை கொண்டு வருவது சரியல்ல.  கிருஷ்ணசாகர் அணையில் இருந்தே பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம், மின்சார உற்பத்திக்காக அணை கட்ட வேண்டுமானால் ஒக்கேனக்கலில் கட்டலாம்.

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே மேகதாதுவில் அணை கட்டுவதா? இல்லை ஒகேனக்கல்லில் அணை கட்டுவதா? என்ற பிரச்சினை இருந்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாதிப்படையும்.

அதே நேரம் மின் உற்பத்திக்காகத்தான் மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடகா கூறினால் அதற்கு சிறந்த இடம் ஒகேனக்கல்தான். அவர்கள் அங்கு மின் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும். தமிழக மக்கள் என்றும் அதனை ஏற்று கொள்ள மாட்டார்கள். மத்திய அரசு தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என கூறினார்.

Next Story