தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை - தமிழக தேர்தல் அதிகாரி
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் அனுப்பி உள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என டி.டி.வி. தினகரன் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் 18 எம்எல்ஏக்களும் மேல்முறையீடு செய்துள்ளார்களா என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் விளக்கம் கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கடிதம் எழுதினார்.
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் அனுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story