ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்தது ஏன்? விசாரணை ஆணையத்தில் சரும நோய் நிபுணர் விளக்கம்


ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்தது ஏன்? விசாரணை ஆணையத்தில் சரும நோய் நிபுணர் விளக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்தது ஏன்? என்று விசாரணை ஆணையத்தில் சரும நோய் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது. இதுவரை அதிகாரிகள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சரும நோய் டாக்டர்கள் முரளிதர் ராஜகோபாலன், பார்வதி பத்மநாபன் ஆகியோர் ஆஜரானார்கள். ஜெயலலிதாவுக்கு சரும நோய் தொடர்பாக அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அவர்கள் ஆணையம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மருந்துவ விவரங்கள் அடங்கிய தொகுப்புகளையும் சமர்ப்பித்தனர். அதனைதொடர்ந்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் முன்வைத்த குறுக்கு விசாரணைக்கும் உடன்பட்டனர்.

காகிதத்தை தொடுவதால் ஒவ்வாமை

இதுகுறித்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணை ஆணையத்தில் இன்றைய தினம் (நேற்று) ஆஜரான டாக்டர்கள் இருவரும் எந்த காலகட்டத்தில் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சரும பிரச்சினைக்காக சிகிச்சை அளித்தோம்? என்பதை குறிப்பிட்டனர்.

குறிப்பாக முரளிதர் ராஜகோபாலன் ‘1998-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு சரும பிரச்சினை தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறேன். 2016-ம் ஆண்டு மே 31-ந் தேதி தான் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்தேன். அப்போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட எழுத்துகளை தொடுவதால் ஏற்படும் ஒவ்வாமை தொடர்பாக சில ஆலோசனைகளை அவருக்கு கூறி மருந்துகளை கொடுத்தேன்’ என்று குறிப்பிட்டதோடு அதுதொடர்பான மருத்துவ குறிப்பு விவரங்களையும் சமர்ப்பித்தார்.

மருத்துவ குறிப்புகள்

‘கோப்புகளை கையாளுவதை தவிர்க்கலாமே’ என கேட்டதற்கு ‘நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். எனது பணி தொடர்பான விஷயங்களில் கோப்புகளை கையாளாமல் இருக்கமுடியாது’ என்று ஜெயலலிதா கூறியதாக அவர் தெரிவித்தார்.

போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரும் டாக்டர்களின் முக்கிய பரிந்துரைகள் அடங்கிய தொகுப்பை டாக்டர் சிவக்குமார் நேற்று (நேற்று முன்தினம்) ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் டாக்டர் முரளிதர் ராஜகோபாலனின் மருத்துவ குறிப்புகளும் இருந்தன.

ஸ்டீராய்டு மருந்துகள்

2016-ம் ஆண்டு ஜூலை- ஆகஸ்டு மாதங்களில் ஜெயலலிதாவை சந்தித்து சரும பிரச்சினைக்கான சிகிச்சை அளித்ததாக டாக்டர் பார்வதி பத்மநாபன் தெரிவித்தார். ஒரு பெண் மருத்துவராக அவரை பரிசோதனை செய்து, உடலில் எங்கெல்லாம் தடிப்புகளும், அரிப்புகளும் இருந்தன? என்று பரிசோதித்ததாகவும் கூறினார். ‘அரிப்பு பிரச்சினையால் என்னால் இரவெல்லாம் தூங்கமுடியவில்லை. தூக்கமில்லாத காரணத்தால் நடக்கவும் முடியவில்லை. மன உளைச்சலாக இருக்கிறது. இதனால் என்னால் தலைமை செயலகம் சென்று பணிகள் செய்யமுடியவில்லை’ என்று ஜெயலலிதா குறிப்பிட்டார் என அவர் தெரிவித்தார்.

‘இதையடுத்து ஸ்டீராய்டு குறித்து ஆலோசனைகளை அவரிடம் கூறி மிக பாதுகாப்பான மருந்துகளை அவருக்கு வழங்கினேன். 5 நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்க சென்றபோது மருந்துகள் மூலம் அவரது சரும பிரச்சினைகள் சரியாகி இருந்தது’ என டாக்டர் பார்வதி பத்மநாபன் தெரிவித்தார். இந்த 2 டாக்டர்களின் பெயர்களும் டாக்டர் சிவக்குமார் தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story