திருத்தணி அருகே விபத்தில் சிக்கிய காரில் ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் போலீசார் விசாரணை


திருத்தணி அருகே விபத்தில் சிக்கிய காரில் ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-05T02:08:24+05:30)

திருத்தணி அருகே விபத்தில் சிக்கிய காரில் ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி, 

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ரெயில் நிலையம் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையோரத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காரின் முன் பகுதி நசுங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த காரின் உள்ளே ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

பறிமுதல்

இதைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடனே அங்கு சென்று கிரேனை வரவழைத்து பள்ளத்தில் கிடந்த காரை நிலைநிறுத்தி செம்மரக்கட்டைகளையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றை திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

போலீஸ் விசாரணையில் செம்மர கடத்தல் கும்பல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி கொண்டு வரும்போது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதையடுத்து கடத்தல்காரர்கள் அந்த காரை அங்கேயே விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் காரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரும், வனத்துறையினரும் செம்மரக்கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story