பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய்-குழந்தை சாவு
பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை உயிரிழந்தனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி(26). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோமதிக்கு கடந்த 2-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தையை, வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் உறவினர்கள் புதைத்தனர்.
தாய் சாவு
வீட்டில் பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தது. மேலும் அவர் உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடனடியாக கோமதிக்கு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோமதி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மற்றும் போலீசார் கோமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story