தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 5:15 AM IST (Updated: 5 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

காற்றழுத்த தாழ்வுநிலை உள்நோக்கி நகருவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி, நுங்கம்பாக்கம், பெரியமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், பூமியை குளிரவைத்த மழை சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (புதன்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரக்கடல் வரை தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தின் உள்நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு சில முறை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொன்னேரியில் 13 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

பொன்னேரியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழவரத்தில் 8 செ.மீ., கேளம்பாக்கம் 7 செ.மீ., செங்குன்றம், காரைக்கால் தலா 5 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 4 செ.மீ., ஆலங்குடி, பரங்கிப்பேட்டை, தாமரைப்பாக்கம், தரங்கம்பாடி, மாமல்லபுரம், அதிராம்பட்டினம் தலா 3 செ.மீ., மணமேல்க்குடி, சிதம்பரம், நாகை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நத்தம், முத்துப்பேட்டை, நன்னிலம், திருமயம், பேராவூரணி, புதுக்கோட்டை தலா 2 செ.மீ., பூண்டி, சீர்காழி, வேதாரண்யம், தாம்பரம், மதுக்கூர், ஆணைக்காரன்சத்திரம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூர், தேவகோட்டை, காட்டுமன்னார் கோவில், மேட்டுப்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம், மதுரை தெற்கு தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Next Story