மேகதாது விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்


மேகதாது விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
x
தினத்தந்தி 5 Dec 2018 12:52 PM GMT (Updated: 5 Dec 2018 12:52 PM GMT)

மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது.

அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதை தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.

அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தது.  இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய நீர் ஆணையத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Next Story