பிரதமரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்: ஸ்டாலின்; சவாலை ஏற்கிறோம்: எச். ராஜா


பிரதமரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்:  ஸ்டாலின்; சவாலை ஏற்கிறோம்:  எச். ராஜா
x
தினத்தந்தி 5 Dec 2018 1:11 PM GMT (Updated: 5 Dec 2018 1:36 PM GMT)

பிரதமரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்ற ஸ்டாலினின் சவாலை ஏற்கிறோம் என எச். ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்பொழுது, காவிரி ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், தமிழகத்திலே தான் அதிகம் பாய்கிறது. இயற்கை கொடுத்த கொடையை தடுக்கும் பணியில், கர்நாடக அரசு தொடர்ந்து எல்லா வழிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு நிச்சயம் தண்ணீர் வராது.

2015-2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு அணை கட்ட முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கிய நேரத்தில் சட்டமன்றத்தின் மூலமாக எதிர்த்தோம். நியாயமாக பா.ஜ.க. அரசு அப்போதே அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் என்று கேள்வியாவது கேட்டிருக்க வேண்டும்.  ஆனால் தமிழகத்துக்கு மோடி ஓரவஞ்சனையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழ்நாட்டில் மலரும் என்கிறார்கள்?. புல்லே வராத போது தாமரை மலர்ந்திடுமா?. மேகதாது பிரச்சினையில் தமிழகத்தை மோடி வஞ்சிக்க நினைத்தால் இனி தமிழகத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அவர் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம். தமிழகம் காக்க, தஞ்சையை காப்போம். காவிரியை காக்க மேகதாதுவை தடுப்போம் என்று பேசினார்.

இந்த நிலையில், பிரதமரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்ற மு.க. ஸ்டாலினின் சவாலை ஏற்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா அறிவித்துள்ளார்.  அவர் தி.மு.க.வின் இந்த சலசலப்புக்கெல்லாம் பா.ஜ.க. அஞ்சாது என்று கூறியுள்ளார்.

Next Story