குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் சோதனை ஓட்டம் நடந்தது


குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் சோதனை ஓட்டம் நடந்தது
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:49 PM GMT)

குன்னூர்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் ரெயில்பஸ் சேவை தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 200 பயணிகள் பயணம் செய்யலாம். இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் வழியாக போடப்பட்ட தண்டவாளத்தில் இந்த மலைரெயில் செல்வதால், அதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரெயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிவரை டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர்-ஊட்டி இடையே அதே தண்டவாளத்தில் ரெயில் பஸ் சேவை தொடங்க சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

60 இருக்கைகள்

இதற்காக மேற்கு ரெயில்வே துறையில் அகமதாபாத், குஜராத்தில் இயக்கப்பட்டு வந்த ரெயில்பஸ் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரெயில் பஸ் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இது 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது முன்னும் பின்னும் இயக்கப்படும் வகையில் உள்ளது. அதாவது 2 என்ஜின்கள் உள்ளன. இரு பக்கமும் டிரைவர்கள் அமர்ந்து இந்த ரெயில்பஸ்சை இயக்கலாம். டீசல் மூலம் இயங்கும் இந்த ரெயில் பஸ்சில் 60 இருக்கைகள் உள்ளன. 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இது பார்ப்பதற்கு ஆம்னி பஸ்போன்று அழகிய வடிவமைப்பில் இருக்கிறது. ஆனால் ரெயில் தண்டவாளத்தில் இயங்குவதால் ரெயில்பஸ் என்று அழைக்கப்படுகிறது.

சோதனை ஓட்டம்

இந்த ரெயில்பஸ் சோதனை ஓட்டம் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் பாதை வரை 5 முறை சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின்னர் மேட்டுப்பாளையம்-கல்லார் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரெயில்வே சீனியர் டிவிஷனல் என்ஜினீயர் முகுந்தன், சீனியர் டிவிஷனல் என்ஜினீயர் அரவிந்தன், கோச் பொறியாளர் முகமது அஸ்ரப், குன்னூர் ரெயில் நிலைய மேலாளர் ரமேஷ் உள்பட அதிகாரிகள் கண்காணித்தனர்.

புதிய தொழில்நுட்பம்

இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதும், ரெயில்பஸ் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு புதியதொழில் நுட்பத்துடன் மலைப்பாதைக்கு ஏற்றாற்போல பல்வேறு மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு கண்ணைக்கவரும் வண்ணம் வர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்து சேரும். பின்னர் குன்னூர்-ஊட்டி இடையே ரெயில்பஸ் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story