நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது ஜெயலலிதா நினைவிடத்தில், டி.டி.வி.தினகரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது ஜெயலலிதா நினைவிடத்தில், டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2018 10:30 PM GMT (Updated: 5 Dec 2018 8:57 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று ஜெயலலிதா நினைவிடத்தில், டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை,

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க.வினர் பேரணி தொடங்கிய அண்ணாசிலை அருகில் இருந்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அக்கட்சியினர் அமைதி பேரணியை தொடங்கினர். டி.டி.வி.தினகரன் திறந்த வாகனத்தில் செல்ல, அவரை பின் தொடர்ந்து அ.ம.மு.க.வினர் நடந்து சென்றனர்.

மதியம் 12.20 மணிக்கு தொடங்கிய பேரணி மதியம் 1.30 மணியளவில் ஜெயலலிதா சமாதியை வந்தடைந்தது.

உறுதிமொழி

ஜெயலலிதா சமாதியில் டி.டி.வி.தினகரன் மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க. உறுதிமொழி நிகழ்ச்சி நடந்த மேடை அருகே திறந்தவேனில் நின்றபடி தங்க தமிழ்ச்செல்வன் உறுதிமொழி வாசகங்களை வாசித்தார்.

அ.ம.மு.க.வின் உறுதிமொழி வாசகங்கள் சில வருமாறு:-

* ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க.வை அ.ம.மு.க. மீட்டெடுக்கும்.

* நீதியின் தீர்ப்பை பெற்று இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டு காட்டுவோம்.

* 20 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தனியாக வந்தாலும், நாடாளுமன்ற தேர்தலோடு வந்தாலும் டி.டி.வி.தினகரன் தலைமையில் மாபெரும் வெற்றியை பெற்றுக்காட்டுவோம்.

மேற்கண்டவாறு வாசகங்கள் இடம் பெற்றன.

டி.டி.வி.தினகரன் பேட்டி

முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினாலும், இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.

தேர்தலில் தமிழக மக்களும், இந்திய மக்களும் நல்ல முடிவை எடுப்பார்கள். எனவே மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தால்தான் அன்றைக்கு(தேர்தல் முடிந்தவுடன்) பயன் உள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது அவசியம் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நானும் கருதுகிறேன்.

20 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக நாங்கள் மேல்முறையீடு செய்ய வில்லை. எனவே அந்த 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வரப்போகிறது. அதில் 8 தொகுதியில் ஆளுங்கட்சி ஜெயிக்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த ஆட்சி நிச்சயம் இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story