மாநில செய்திகள்

மேகதாது அணை பிரச்சினை குறித்து சட்டசபை சிறப்பு கூட்டம்:மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + MK Stalin Interview

மேகதாது அணை பிரச்சினை குறித்து சட்டசபை சிறப்பு கூட்டம்:மு.க.ஸ்டாலின் பேட்டி

மேகதாது அணை பிரச்சினை குறித்து சட்டசபை சிறப்பு கூட்டம்:மு.க.ஸ்டாலின் பேட்டி
மேகதாது அணை பிரச்சினை குறித்து சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து கருத்து சொல்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுகிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இது அவசியமான கூட்டம். ஏற்கனவே தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், திருச்சியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திலும் அது பற்றி பேசி இருக்கிறோம்.

எனவே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் அரசின் சார்பில் வைக்கப்படக்கூடிய தீர்மானத்தைப் பொறுத்து நாங்கள் எங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுவோம். அந்த அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை நிச்சயமாக இருக்கும்.

சோற்றுக்கு கையேந்தும் நிலை

கேள்வி:- கஜா புயலுக்கான நிவாரண நிதி இப்போது மறக்கப்பட்டுவிட்டதாக சில கருத்துகள் வருகிறதே?

பதில்:- நான் நேற்று(நேற்று முன்தினம்) கூட திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினேன். அங்கு மக்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு மிக சோகமான ஒரு சூழ்நிலையிலே இருந்து வருகிறார்கள். அதாவது நாட்டிற்கே படி அளந்து கொண்டிருந்த அந்த டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் சோற்றுக்கு கையேந்தும் ஒரு கொடுமையான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி கண்டனக் கூட்டத்தில் பேசுகிறபோது மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னேன். தமிழக அரசின் சார்பில் கேட்கப்பட்டு இருக்கக்கூடிய நிதியை இன்னும் அதிகப்படுத்தி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் மட்டுமல்ல எல்லாக் கட்சிகளும், எல்லாக் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

மண்டியிட்டு கிடப்பதற்கு தயார்

கேள்வி:- கஜா புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் எந்த நிவாரணமும் செய்யவில்லை என சொல்லப்படுகிறதே?

பதில்:- அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடப்பதற்கு அவர்கள் தொடர்ந்து தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 3 தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைத்ததில் உள்நோக்கம்: நியாயம் கிடைக்காவிட்டால் கோர்ட்டை நாடுவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி
“ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது”, என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
2. வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி
வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை என மு.க.ஸ்டாலின் கூறினார்.